Friday, April 25, 2025

ஞான கருவுலகத்தில் உலக புத்தக தின விழா (24. 4. 25.)

#உலகப்_புத்தகதின_விழா
# தமுஎகச வடகாடு கிளை
# ஞானக்கருவூலகம்.

மாலை தோழர் தாய் தமிழ் ராஜா அழைத்தார்.  வடகாடு கிளையின் சார்பில் காசிம் புதுப்பேட்டையில் உலக புத்தக தின நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது வந்து விடுங்கள் என்றார்.

ஐயா பாபு ராஜேந்திரன் அவர்கள்தான் தலைமை விருந்தினர்.

விழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

குறிப்பாக பள்ளி மாணவர்களின் உரை அருமையாக இருந்தது.

எதிர்காலத் தலைமுறையின் கையில் ஒலிவாங்கியைக் கொடுப்பதில்தான் வளர்ச்சி இருக்கிறது என்று நம்புபவன் நான்.

இதை மிகச் சரியாகச் செய்து காட்டினார்கள் வடகாடு கிளை தோழர்கள் .

ஞானக்கருவூலகம் என்கிற நூலகத்தை வைத்து அறிவொளி பரப்பி வருகிறார் அண்ணன்  பஷீர் அலி. இந்த நூலகத்தின் வளாகத்தில்தான் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தோழர்  எஸ் ஏ கே கருப்பையா அவர்கள் நிகழ்ச்சியை மிக அருமையாக ஒருங்கிணைத்தார்.

வடகாட்டில் தென்னை மரங்களுக்கு இடையே மிளகு கொடியை படர வைத்து சாதனை படைத்த தோழர் காமராஜ், அரசு பள்ளிகளின் இயக்கத்தில் புது பாய்ச்சலை மாநிலம் எங்கும் நிகழ்த்தி காட்டியதில் பெரும் பங்கு வகிக்கும் மரியாதைக்குரிய நல்லாசிரியர்  கருப்பையன் ஆறுமுகம் போன்ற சாதனையாளர்கள் வருகை தந்திருந்தனர்.

ஆலங்குடி கிளையைச் சேர்ந்த தோழர் பாலா மிக அருமையாக பேசினார். 

நல்லாசிரியர்  கருப்பையன் ஆறுமுகம் அவர்களின் உரை நெகிழ்வாக இருந்தது. ஐயா பாபு ராஜேந்திரன் அவர்களின் உரையில் கிளாசிக் எழுத்தாளர்களை (முவா) நினைவு கூர்ந்து, சுரேஷ் மான்யா, முட்டிக்குறிச்சி நாவலை தந்த சோலச்சி வரை அறிமுகம் செய்து அசத்தினர்.

நான் நான்கு நூல்களை இளம் மாணவர்களுக்கு பரிந்துரைத்தேன்.

ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்க வழக்கங்கள் - ஸ்டீபன் கவி

பணக்காரத் தந்தை ஏழை தந்தை - ராபர்ட் கியசாகி

காலம் தோறும் பிராமணியம் - அருணன்

தலைவன் ஒரு சிந்தனை - எம் எஸ் உதயமூர்த்தி

ஆசிரியப் பெருந்தகைகள் மாணவர்களின் பாதுகாப்பிற்காக அரண் போல் நின்று நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிகழ்வுக்காக பாடுபட்ட அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ஓவியர் சேரன் அவருடைய புதல்வர் , காசிம் புதுப்பேட்டையின் ஊராட்சி மன்றத் தலைவர், ஆசிரியர் தமிழரசன். மிக அற்புதமாக பேசிய அரசு பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

Monday, December 02, 2024

சிறந்த தனிநபர் நூலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் விருது வழங்கினார்

சிறந்த தனிநபர் நூலகத்திற்கான இந்த ஆண்டின் விருதினை நாணயவியல் சங்கத் தலைவர், சமூக சேவகர், 
காசிம் புதுப்பேட்டை ‘ ஞானக் கருவூலகம்’ நூலகத்தின் நிறுவனர் ஹாஜி சேக்தாவுது பஷீர்  அவர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி அருணா இ.ஆ.ப அவர்கள்
29.11.2024 அன்று வழங்கினார்கள்.
மாவட்ட நூலக அலுவலர் அ. பொ. சிவகுமார், நூலகர் கண்ணன், வாசகர் வட்டத் தலைவர், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி
உடனிருந்தனர்.

கீரமங்கலம் அருகே காசிம் புதுப்பேட்டை கிராமத்தில் சொந்த செலவில் நூலகம் நிறுவி, மாணவர்கள், பொதுமக்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராவோர் பயன்பாட்டுக்கு வழிவகுத்த அன்புச் சகோதரர் சே. தா. பஷீர் அலி அவர்களின் சமூகப் பங்களிப்பு மிகுந்த
பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது.