Monday, June 19, 2023

தொடர வேண்டிய கதை : ஆர் நீலா பாமர தரிசனம்

பழங்குடி மக்களில் இருந்து ஆறு இளம் விஞ்ஞானிகள் வந்திருந்தார்கள். எல்லோரும்  15 வயதிற்கு உட்பட்டவர்கள். அவர்கள் அதுவரை பேருந்து பயணம் சென்றதில்லை.

    இட்லி தோசை போன்ற ஆடம்பர உணவுகளை உண்டதில்லை. அவர்கள் வசிக்கும் மலைப்பகுதியில் முறையான பள்ளிக்கூடமும் இல்லை.  தன்னார்வலர்கள் ஒருங்கிணைத்து நடத்திய இரவு பள்ளியில் பயின்று தங்கள் வாழ்வாதாரங்களை ஆய்வு செய்து, அவர்களின் ஆய்விற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த விஞ்ஞானிகள் வந்திருந்தார்கள்.

    இதுவரை அவர்கள் பஸ்ஸில் சென்றதில்லையாம். காம்பவுண்டுக்கு வெளியில் ஓடும் பேருந்துகளைப் பார்த்ததும் வெளியில் ஓடி விட்டனர். சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தவர்களை வாட்ச்மேன் உள்ளே விட மறுத்து விட்டார்.

   புதுக்கோட்டை சிவபுரம் மௌண்ட் சியான் பொறியியல் கல்லூரியில் அந்த என் ஜி எஸ் சி மாநில மாநாடு நடந்து கொண்டிருந்தது. கிழிசல்  ஆடைகளோடும் ஏக்கப் பார்வையோடும் இருந்த அந்த குழந்தைகளை வாயில் காவலர் உள்ளே விட மறுத்துவிட்டார்.

    ஓடோடி வந்த புதுகை செல்வா, அவரிடம் உண்மையை எடுத்துச் சொல்லி மிக இளம் விஞ்ஞானிகளை உள்ளே அழைத்துச் சென்றார். .
அந்த சிறுவர்களை எல்லோரும் வியப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த சிறுவர்களுக்கு எல்லாமே புதுமையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. பட்டாம்பூச்சிகளாய் அந்த வளாகம் முழுவதும் சுற்றித்  திரிந்தார்கள்.

   அவர்களை புதுகையில் நாணயங்கள் சேகரிக்கும் நண்பரான பஷீர் அலி பார்த்தார் யாருக்குமே தோன்றாத யோசனை அவருக்குத்தான் தோன்றியது.

   புதுகை நகரத்திற்கு சென்று ஆறு பேருக்கும் அழகிய ஆடைகளை எடுத்து வந்தார். அதை சொல்லாமல் கொள்ளாமல் அந்த குழந்தைகளிடம் கொடுக்க முயன்றார்.

   நாணய கண்காட்சியை பார்க்கச் சென்ற நான் எதேச்சையாக அதை கவனித்து விட்டேன். ஓடோடிச் சென்று கையும் பையுமாகப் பிடித்து விட்டேன். போட்டோகிராபரை வரவழைத்து அவர் ஆடைகள் கொடுப்பதை எடுக்க முயன்றேன். அவர் தன் உதவியை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அதோடு என் கைகளால் அக்குழந்தைகளுக்கு அந்த ஆடைகளை வழங்க வைத்தார்.

‌  அன்று அந்த குழந்தைகளின் மத்தாப்பு சிரிப்பிற்கு சொந்தக்காரரான பஷீர் அலி அடுத்த கணமே அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டார். ஆனால் ஒரு வருடம் கடந்தும் இச்சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் என் கண்கள் பணித்து விடுகிறது.
 நன்றி: பாமர தரிசனம்/ ஆர்.நீலா
வெண்பா வெளியீடு -சென்னை.