Tuesday, January 09, 2024

காசிம் புதுப்பேட்டை. ஊ.ஒ.ந.பள்ளி மாணவர்கள் "ஞானக் கருவூலகம்" களப்பயணம். 09/01/2023

#அறிவுப்பசிதேடி.....
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், காசிம்புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஆறு, ஏழு மற்றும்  எட்டாம் வகுப்பு பயிலும் 50 மாணவர்கள்  களப்பயணமாக காசிம்புதுப்பேட்டை  திரு. Shaik Dawood Basheer Ali  அவர்கள் சமீபத்தில் தொடங்கிய "#ஞானக்_கருவூலகம்" என்ற நூலகத்திற்குச் சென்றோம்.

பள்ளித்தலைமை ஆசிரியை திருமதி. செந்தில்வடிவு அவர்களின் வழிகாட்டுதலுடன் ஆசிரியர்கள், இளங்கோ மற்றும் தியாகு ஆசிரியர்  ஆகியோர் களப்பயண ஏற்பாடுகளை செய்திருந்தனர் .

நூலக பார்வையிடல் செய்வதற்காக வந்திருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் வரவேற்ற நூலகத்தின் நிறுவனர் திரு பஷீர் அலி இளமைப் பருவத்தில் இருந்து தான் பல நூல்களை  சேகரித்து நூலகம் உருவாக்கிய விதத்தை விளக்கிய விதம் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும் தான் சேகரித்து வைத்திருந்த #பழங்கால_நாணயங்கள், #தபால்_தலைகள் போன்றவற்றை மாணவர்களுக்கு காண்பித்து உரிய விளக்கம் அளித்தார்.

அவரது விளக்கத்தினை குறிப்பெடுத்துக் கொண்ட மாணவர்கள் நூலகத்தில் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 
கதைகள்,சிறுகதைகள் வரலாறு,அரசியல்,மொழி, இலக்கியம், பண்பாடு , தொன்மை, சிறுவர் இதழ்கள், அறிவியல் புதினங்கள் போன்ற பல வகையான புத்தகங்களை மாணவர்கள் ஆர்வமுடன் எடுத்து வாசித்து மகிழ்ந்தனர்.

தாங்கள் வாசித்த புத்தகத்தைப் பற்றி குறிப்பெடுத்துக் கொண்ட மாணவர்கள் நூலகப் பார்வையிடலின் போது தாங்கள் கண்டு,கேட்டு ரசித்தவற்றை கவனமுடன் குறிப்பெடுத்துக் கொண்டு தங்களுக்குள் ஏற்பட்ட பலவிதமான ஐயங்களை திரு. பஷீர் அலியிடம்  கேட்டுத் தெளிவு பெற்றனர்.

மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை எடுத்து 
சுமார் ஒரு மணிநேரம் வாசித்தனர். பின்னர் தாங்கள் வாசித்த
புத்தகத்தின் எழுத்தாளர், வெளியிட்ட பதிப்பகத்தின் பெயர், புத்தகத்தின் தலைப்பு, புத்தகத்தில் இடம்பெற்றுள்ள செய்திகள் மற்றும் முக்கிய கருத்துக்கள் போன்றவற்றை குறிப்பெடுத்து கொண்டனர். 

களப்பயணம் மேற்கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் , திரு பசீர் அலி அவர்களை கடலை மிட்டாய் வழங்கி உபசரித்தார். இறுதியாக மாணவர்களுக்கு கடைகளில் விற்கப்படும் நொறுக்குத்தீனி, துரித உணவுகளின் கேடுகள் பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் மாணவர்களுக்கு கூறி விழிப்புணர்வை ஏற்படுத்திய விதம் அருமை.

நிறைவாக களப் பயணத்திற்காக தனது நூலகத்தை பார்வையிட உதவிய திரு பஷீர் அலி அவர்களுக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் நன்றி தெரிவித்து மீண்டும் மீண்டும் நூலகத்திற்கு வருவதாகக் கூறி இனிதே விடைபெற்றனர்.