Saturday, October 23, 2021

இஸ்லாம் வலியுறுத்தும் பெண் கல்வி.

இஸ்லாம் வலியுறுத்தும் பெண் கல்வி 
    "கல்வியை தேடி பெறுவது ஒவ்வொரு முஸ்லீம்களின் ஆண்கள் பெண்கள் மீதும் கடமையாகும் " என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியுள்ளார்கள் ( இப்னு மஜா ) .
    உடலுக்கு தருகின்ற முக்கியத்துவத்தை விட அறிவுக்கு தர வேண்டிய முக்கியத்துவம் சற்றும் குறைந்ததல்ல. ஆகவே , ஒவ்வொரு முஸ்லீம் பெண்ணும் தன் உடலை பேணுவது போல் அறிவை வளர்ப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. ஆணை போன்று பெண்ணும் பயனுள்ள கல்வியை தேடவேண்டும் என்று இஸ்லாம் கடமையாக  வலியுறுத்துகிறது. 
      ஆனால்  , இக்காலத்தில் தங்களுடைய வாழ்க்கை முன்னேற்றம் அடைய ஒவ்வொரு மனிதனும் அரும்பாடு பட்டு உழைப்பதை நாம் காணலாம் . ஆனால் , பல பெண்கள் தங்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை . 
பெண் கல்வி , பெண் உரிமை , மற்றும் ஒழுக்கத்தை போதிக்கும் செயல்கள் , இன்னும் அநேக விஷயங்களிலும் இச்சமுதாயம் பின்தங்கியே இருப்பதும் நாம் அறிந்ததே  ! 
     நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களால் உருவாக்கப்பட்ட பல பெண்கள் , பல துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார்கள். அதாவது , இறையச்சத்திலும் கல்வியிலும் , போர்க்களத்திலும் , அன்பிலும் , எப்படி உருவாக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இஸ்லாமிய வரலாற்றை படித்து நாம் உணரலாம் .
     கல்வி அறிவில் பின் தங்கிய பெண்களை அறிவுரை புகட்டி ஹாபிசாகவும் ( திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தவர் ) பெரும் சட்ட மேதைகளாகவும் உருவாக்கி காட்டினார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  அவர்கள்.
அடுப்படியில் முடங்கி கிடந்த பெண்மணி என்ற நிலைமையை மாற்றி அன்னை ஆயிஷா (ரலி ) அவர்களை , அதிகதிகமான ஹதீஸ்களை (நபிகளார் சொல், செயல் ) அறிவிக்கும் பெண்மணியாக உருவாக்கினார்கள் . ஹதீஸ் கலை வல்லுனர்களில் அன்னை ஆயிஷாவுக்கு நிகர் அவர்களே ! என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  அவர்கள் சான்று பகிர்கின்றனர் .
     பெண்களும் கல்வியை தேடி பெறுவது கட்டாயம் என்று உரைத்த நபிகளார் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றார்கள் . 
ஆனால் இன்றைய பெற்றோர்கள் பலர் , அடுப்பூதும்  பெண்களுக்கு படிப்பெதற்கு என்று படிப்பை பாதியில் நிறுத்திவிடுகிறார்கள் . இதனால் அவர்கள் கல்வி அறிவும் , வளமான எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது .
     இஸ்லாம் போதிக்கும் நற்பண்புகளையும் ,நல்லொழுக்கங்களையும் கற்றுக்கொடுத்து அதை கடைபிடித்து வாழும் நன்மக்களாக உருவாக்கி பண்படுத்தப்பட்ட பின் நமது  பிள்ளைகள் , அது ஆணாக இருந்தாலும் , பெண்ணாக இருந்தாலும் படிக்கும் காலங்களிலும் மற்ற காலங்களிலும் நிச்சயம் வழிதவறி போகவே மாட்டார்கள்.
கல்வியில் பின்தங்கியும் பொருளாதாரத்திலும் பின்தங்கிதான் இருக்கின்றோம் நன்றாக படிக்கும் திறமையான பிள்ளைகளுக்கு செல்வந்தர்கள் படிப்பு செலவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் . கல்வி கற்பதற்கு பணம் ஒரு தடை  அல்ல.  ஆகவே பெண்கள் படித்து அவர்கள் வாழ்க்கையில் வளம்பெற வலி வகுக்கலாம் .
    பாரதி கண்ட புதுமை பெண்ணாக இன்று உலகில் வாழும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது அதற்க்கு அடித்தளம் அமைத்ததே என்பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்தான் .
     இறைவன் நமது பெண்களின் கல்வித்தரத்தை உயர்த்தி அதன் மூலம் நமது சமுதாயமும் உலகமும்  நற்பெயர் அடைய அருள்புரிவானாக ஆமீன் ! 
                                                                                   - நன்றி  பச்சை  ரோஜா ( DEC -16 )